புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!

புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.




பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாக்கின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நுõற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் இந்தியாவிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமலர்.

Posted by பிருந்தன்

நன்றி பிருந்தன்.

இப்படி ஒரு வலைப் பூ ஆரம்பித்து பத்திரிக்கையில் வந்த இந்த விஷயத்தை பதிய வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். உங்கள் பதிவை அப்படியே இங்கு உபயோகிக்கிறேன். அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

12 Comments:

said...

இருக்கும் சிரிது காலத்திற்கு தான் மட்டும் சுகத்தை அனுபாவித்தால் போதும் என்ற மனிதனின் மனப்பான்மையால்தான். நமது பூமிக்கு இந்த நிலை. இது மாற வேண்டும். புத்தம் புது பூமி வேண்டும்.

said...

விக்னேஷ் அழகா நிதர்சனத்த சொல்லி இருக்கீங்க. . . .

said...

ஹ்ம்ம்... நிறைய பேரு இதப் பத்தி எழுதிட்டாங்க. இன்னுமும் விவாதம் போயிட்டிருக்கு...

உங்களுக்கு மைக்கேல் க்ரைடன்னுடைய (Michael Crichton) இரண்டு புத்தகங்கள் சிபாரிசு செய்கிறேன்.

அ) Jurassic Park - இந்த பூமியின் பரினாம வளர்ச்சி பற்றிய மிக அருமையான தகவல்களுடன் இருக்கும் புத்தகம். மனித இனம் தோன்றி 35000 வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்னர் Jurassic age இருந்தது பல மில்லியன் வருடங்கள். we just arrived.

ஆ) State of Fear - இதில் பல ஆவண தகவல்கள் இந்த 'Global warming' நிகழ்வின் இன்னொரு பக்கத்தை சொல்கிறது.

மற்றபடி இயற்கையை 'பாதுகாக்க' மனிதனுக்கு வயசு பத்தாது. ;-).

ஆனால் மனிதன் தன்னை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் சில ஆயிரம் வருடங்கள் கழித்து 'Human Park' என்று வேறு யாராவது படம் எடுத்துவிடுவார்கள்.

said...

ஸ்ரீதர் வெங்கட், நல்ல தகவல்களுக்கு நன்றி.

உங்க கடைசி கமென்ட் சூப்பர்.

said...

வெங்கட், சமீபத்தில் நான் படித்த Al Gore எழுதுன 'An Inconvenient Truth' அப்படிங்குற புத்தகத்துலே, நிறைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் நிறைய விஷயங்கள் இருக்கு! உலகத்தின் முக்கால்வாசி பிரசினைகளுக்கு அமெரிக்கா காரணமாக இருப்பது மாதிரி, Global Warming - க்கும் அமெரிக்காதான் காரணமா இருக்கு!!

மிக விரைவில் அந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி ஒரு பதிவு போட ஆசை!

நன்றி, இந்த மாதிரி முக்கியமான பிரசினைகளைத் தமிழ்மணத்தில் சேர்ப்பதற்கு..

said...

நல்லபதிவு வெங்கட்ராமன்!

தற்போதைய சூடானா பேசுபொருளாக வலைபதிவுகளில் புவி சூடாதல் இடம்பிடிப்பது , பெருகி வரும் விழிப்புணர்ச்சியை காட்டுகிறது!

said...

புவி வெப்பமடைகிறது சரி! எதனால் வெப்பமடைகிறது? என்கிற கேள்வியை யாரும் எழுப்பவில்லை! அப்படி எழுப்பினாலும் ஏகாபத்திய நாடுகள் தருகிற துண்டு பிரசுரத்தின் பிரதிகளாகவே விடைகள் தர முடிகிறது. அறிவியல் சார்ந்த உண்மைகளை யாராவது சொல்லியிருக்கிறார்களா?

தஞ்சாவூரான் சொன்ன மாதிரி இந்த பிரச்சினை வெறும் இயற்கை சீரழிவு பிரச்சினையாக மட்டும் பார்க்கமால், இதற்க்கு பின்னணியில் இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் உண்மை முகம் வெளியே வருமா!

said...

நன்றி தஞ்சாவூரான்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.

மனிதன் இயற்கையை விட்டு வெகு தூரம் இருக்கிறான் விஞ்ஞானத்தால் . . . .

உங்கள் பதிவை சீக்கிரம் போடுங்கள். பலரும் பல விஷயங்களை அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். . . . .

said...

நன்றி வவ்வால்.

*************************************
தற்போதைய சூடானா பேசுபொருளாக வலைபதிவுகளில் புவி சூடாதல் இடம்பிடிப்பது , பெருகி வரும் விழிப்புணர்ச்சியை காட்டுகிறது!
*************************************

இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். . . . .

said...

நன்றி பாரி அரசு.

*********************************
ஏகாதிபத்திய நாடுகளின் உண்மை முகம் வெளியே வருமா!
*********************************

ஏகாதிபத்திய நாடுகளின் விஞ்ஞானமும் வியாபாரமுமே இன்றைய இயற்கை அழிவுகளுக்கு மூல காரணம். . . . . . .

said...

உங்கள் கருத்து அனைத்தும் அருமை. நான் உங்களிடம் ஒன்று வேண்டுவது என்னவென்றால், உங்கள் கண்ணோட்டத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக்கி பசுமையை காப்பதுடன் கடலையும் காக்க போராடுங்கள். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் அணுக்கழிவு ஏற்படுகிறது இதனால் கடல் நீர் முற்றிலும் மாசடைகிறது கடலில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் பாதிப்படைகிறது. எனவே அணுசக்தியை ஆதரிக்காதீர்கள். நன்றி.

said...

உங்கள் கருத்து அனைத்தும் அருமை. நான் உங்களிடம் ஒன்று வேண்டுவது என்னவென்றால், உங்கள் கண்ணோட்டத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக்கி பசுமையை காப்பதுடன் கடலையும் காக்க போராடுங்கள். அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் அணுக்கழிவு ஏற்படுகிறது இதனால் கடல் நீர் முற்றிலும் மாசடைகிறது கடலில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் பாதிப்படைகிறது. எனவே அணுசக்தியை ஆதரிக்காதீர்கள். நன்றி.